தினமணி 25.05.2010
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி : ஆணையர் வேண்டுகோள்
மதுரை, மே 24: மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தேவைப்படும் ஆவணங்களை பொதுமக்கள் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குப் பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி ஜூன் 1-ம் முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களை வீடு தேடி வந்து விவரங்கள் சேகரிப்பார்கள். அப்போது குடும்பத் தலைவர் பெயர், குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
மேலும் வீட்டின் கட்டுமானப் பொருள், குடிநீர் வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி, குடும்பத்தின் வசம் உள்ள வாகனங்கள் மற்றும், தொலைபேசி, செல்பேசி உள்ளிட்ட விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். அதனால் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் கொடுக்க வேண்டும்.
மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவுக்குத் தேவையான குடும்பத் தலைவர் பெயர், குடும்ப அங்கத்தினரின் பெயர், ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி, திருமண நிலை, தொழில் பற்றிய விவரம் மற்றும் நடவடிக்கை பற்றி இருக்க வேண்டும்.
அதேபோல் மணமான பெண்ணுக்கு தந்தை, தாயார் பெயர், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய மற்றும் நிரந்தர முகவரி உள்ளிட்ட விவரங்களை காகிதத்தில் குறித்து வைத்து, கணக்கெடுப்பாளர்கள் வரும்போது கொடுத்து காலதாமதத்தை தவிர்ப்பது அவசியம் என ஆணையாளர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.