மக்கள் வரவேற்பு தொடர்கிறது மலிவு விலை உணவகத்தில் கீழ்ப்பாக்கத்துக்கு முதலிடம்
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள மலிவு விலை உணவகம் மக்கள் ஆதரவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மாநகராட்சி சார்பில் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதலில் 15 மண்டலங்களிலும் தலா ஒரு உணவகம் திறக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிப்ரவரி 24ம் தேதி மேலும் 24 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இம்மாத இறுதிக்குள் மேலும் 161 மலிவு விலை உணவகங்களை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிதாக திறக்கப்பட்ட உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5க்கு விற்கப்படுகிறது. இந்த உணவகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில உணவு கூடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பிடுகின்றனர். இதனால், உணவு கூடங்களில் சிறிது நேரத்தில் பொருட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதைதொடர்ந்து கூடுதலாக உணவு தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
உணவகங்களில் விற்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை எந்தவிதத்திலும் குறையக்கூடாது என மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவ்வப்போது, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவின் தரத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். மக்களின் ஆதரவில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மலிவு விலை உணவகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மலிவு விலை உணவகங்களுக்கு தமிழக அரசு 1 கிலோ அரிசியை ரூ.1க்கு வழங்கி வருகிறது. தற்போது வழங்கப்படும் அரிசி தரம் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு உணவு கூடம் உள்பட 3 இடங்களுக்கு அனுப்பப்பட்ட அரிசியில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.