தினமலர் 19.11.2013
மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு ‘சீல்’
சென்னை:மடிப்பாக்கத்தில், விதிமீறி கட்டிய இரண்டு மாடி கட்டடத்துக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், நேற்று ‘சீல்’ வைத்தனர்.
இதுதொடர்பாக, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
சென்னை, மடிப்பாக்கம், பஜார் சாலையில், 922, 923 எண்களுக்கு உட்பட்ட மனையில், தையல் பிரிவு பயன்பாட்டுக்காக, இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட, அதன் உரிமையாளர், 2011ம் ஆண்டு, அனுமதி வாங்கினார்.
ஆனால், இந்த அனுமதிக்கு மாறாக, முழுவதும், வணிக பயன்பாட்டுக்கான கட்டடம், கட்டி உள்ளார். மேலும், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில், மூன்றாவது தளமும், கட்டி வருவது, தெரிய வந்துள்ளது. விதிகளுக்கு புறம்பான, இந்த கட்டுமான பணிகளை நிறுத்த, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன் பின்பும், பணிகள் நடந்ததால், இந்த வளாகம் முழுவதையும், அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, ‘சீல்’ வைத்து உள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.