தினமணி 23.03.2010
மணி அடித்துக் கொண்டுவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு
குடியாத்தம், மார்ச் 22: குடியாத்தம் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் மணி அடித்துக் கொண்டு வீடு, வீடாகச் சென்று குப்பை அள்ளிச் செல்லும் ரிக்ஷா வண்டிகள் சோதனை ஓட்டமாக திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2.10 லட்சத்தில் 15 ரிக்ஷாக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரிக்ஷாவிலும் தலா 4 பிளாஸ்டிக் டப்பாக்கள் வைக்கப்பட்டுள்ளன. ரிக்ஷாவுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களில் மணி அடித்துக்கொண்டு செல்வார்கள்.
பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வைத்திருக்கும் குப்பைகளை அதில் கொட்டலாம். ரிக் ஷாவில் எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் ஓரிடத்தில் மொத்தமாக கொட்டப்பட்டு, லாரிகள் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படும்.
நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளர்களிடம் ரிக்ஷாக்களை நகர்மன்றத் தலைவர் எம்.பாஸ்கர் வழங்கினார்.
நகராட்சி ஆணையர் ஆர்.சுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், பொறியாளர் உமாமகேஸ்வரி, துப்புரவு அலுவலர் சி.ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் பிரணாகரன், நகரமன்ற உறுப்பினர்கள் பி.மோகன், எஸ்.டி. யுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.