தினமணி 21.06.2010
மதுரையில் தமிழறிஞர்களின் சிலைக்கு மின் அலங்காரம்
மதுரை, ஜூன் 20: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி மதுரை மாநகரிலுள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் சிலைகள் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தமுக்கம் அருகில் உள்ள தமிழன்னை சிலை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, தல்லாகுளத்தில் உள்ள தேசிய விநாயகம் பிள்ளை சிலை, உ.வே.சாமிநாத அய்யர் சிலை, கே.கே.நகரில் உள்ள தொல்காப்பியர் சிலை, மேலமடையில் உள்ள தணிநாயகம் அடிகளார் சிலை, பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வீரமா முனிவர் சிலை, ராபர்ட் டி நோபிலி சிலை, டி.பி.கே. சாலை அருகில் உள்ள நாவலர் சோமசுந்தர பாரதியார் சிலை, தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள பாண்டித்துரை தேவர் சிலை, பனகல் சாலை, சிவகங்கை சாலை சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை, தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நேரு சிலை, ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள தேவநாயகம் சிலை, கக்கன் சிலை, அழகர்கோவில் சந்திப்பில் உள்ள பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள தேவர் சிலை, யானைக்கல்லில் உள்ள மகாத்மா காந்தி சிலை, நேதாஜி சிலை, விளக்குத்தூண் அருகில் உள்ள காமராஜர் சிலை, மேலவெளி வீதியில் உள்ள கட்டபொம்மன் சிலை, சிம்மக்கல் வ.உ.சி. சிலை உள்ள சிலைகள் ரூ.2 லட்சம் செலவில் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 1984-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி மாநகராட்சி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தோரண வாயில்களான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில், கே.கே.நகர் 80 அடி சாலை சந்திப்பு, தமுக்கம் சாலை சந்திப்பு, விரகனூர் சாலை சந்திப்பு, திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பு, விராட்டிபத்து சாலை சந்திப்பு, அவனியாபுரம் சாலை சந்திப்பு மாநகராட்சி நினைவுத்தூண் ஆகிய தோரண வாயில்கள் ரூ.3.50 லட்சம் செலவில் வர்ணம் பூசி அழகு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒருங்கிணைந்த பஸ் நிலையம், அறிஞர் அண்ணா மாளிகை, ராணி மங்கம்மாள் சத்திரம் ஆகிய கட்டடங்கள் முகப்பில் தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.