தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
மதுரை அருகே துணைக்கோள் நகரம்: வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆய்வு
மதுரை அருகே உச்சப்பட்டி – தோப்பூர் கிராமத்தில்
அமைக்கப்பட உள்ள துணைக்கோள் நகரத்துக்கான பணிகளை, வீட்டு வசதி வாரியத்
தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செயதார்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, துணைக்கோள்
நகரம் பற்றிய அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன்படி,
உச்சப்பட்டி – தோப்பூர் கிராமத்தில் 586.86 ஏக்கரில் ஒருங்கிணைந்த
துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
துவக்கியுள்ளது.
முதல்கட்டமாக அணுகுசாலை வசதியுடன் உள்ள தோப்பூர் திட்டப் பகுதியில்
23.70 ஏக்கரில் 448 மனைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி
கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக 50.15 ஏக்கரில் 1000 மனைகள் மேம்பாட்டு
திட்டத்துக்கு மனை வரைபட அனுமதி கோரி உள்ளூர் திட்டக் குழுமத்திடம்
விண்ணப்பிக்கப்பட்டு, விரைவில் அனுமதி பெறும் நிலையில் உள்ளது.
மூன்றாவது கட்டமாக 586.86 ஏக்கரில் மனை மேம்பாட்டுத் திட்டம்
துவங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த
துணைக்கோள் நகரத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் உருவாக்கப்படுகிறது. இதில் 14
ஆயிரத்து 300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2 ஆயிரத்து 500
மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய்
பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும்
ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த திட்டத்தை வாரிய நிதியிலிருந்து செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ. 6.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணைக்கோள் நகரம் அமைப்பதற்காக தற்போது நடைபெற்றுவரும் பணிகளை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் ஆர்.முருகையா பாண்டியன்
வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். இத் திட்டத்தை விரைந்து
செயல்படுத்துமாறு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வாரிய தலைமைப் பொறியாளர் டி. ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர்
கே.பாலச்சந்தர், செயற்பொறியாளர். எல்.பிராங்க் பெர்னாண்டோ, தனக்கன்குளம்
ஊராட்சித் தலைவர் கருத்தக்கண்ணன் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.