மதுரை மாநகராட்சி நிர்வாகம் மீது தொடரும் புகார்கள்
குண்டும் குழியுமான சாலைகள், சீரற்ற குடிநீர் விநியோகம், அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், தெருக்களில் தேங்கும் கழிவு நீர், தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் பெருக்கம் என மக்கள் அவதிப்படும் நிலையில் அதைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, அதிகாரத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதில் அரசியல் பிரமுகர்களுடன், அதிகாரிகளும் புகாருக்கு ஆளாகினர்.
மாநகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டடம் கட்டுவோரிடம் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் வசூலித்ததாகப் புகார் கூறப்பட்டது. அப்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்திக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது. கடந்த பேரவைத் தேர்தலின்போது மதுரை பிரசாரக் கூட்டத்தில் பேசிய தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினரிடமிருந்து மதுரையை மீட்போம் என்றார். அதன்படியே பேரவைத் தேர்தல் மட்டுமின்றி மாநகராட்சித் தேர்தலிலும் அதிமுகவின் பலம் ஓங்கியது.
தற்போது மாநகராட்சியில் அதிமுக சார்பிலான மேயரும், அதிகமான அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால், திமுக ஆட்சியின்போது இருந்த அதே அதிகாரிகள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். மாநகராட்சியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும், கடந்த ஆட்சியின்போது அனுபவித்த வேதனைகள்தான் இன்னும் தொடருகின்றன என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க மாநகராட்சி அக்கறை செலுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். லாரிகளில் குடிநீர் விநியோகம் என்பது அறிவிப்பில் மட்டுமே இருக்கிறது. கொசு மருந்து தெளித்தல், குப்பை அகற்றம் ஆகியவற்றிலும் திருப்தியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் கட்டட வரைபட அனுமதிக்குப் பொதுமக்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டது. அதைப்போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் மூலம், கட்டட வரைபட அனுமதி வழங்குவது செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தெற்கு மண்டலத்தில் ஆன்லைன் மூலம் வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களிடம் பணம் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோல, அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே உள்ள பகுதியில் பொதுச் சாலைக்காக தனி நபர் ஒருவர், தனது இடத்தை தானமாக மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கு உதவுவதாகக் கூறி அதிகாரிகள் செயல்படுவதாக சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
2006 முதல் 2011 வரை வரி விதிப்பு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. அதையடுத்து சில கட்டடங்களில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது, ரூ.4 கோடி முறைகேடு கண்டறியப்பட்டது.
ஆனால், அதன் மீதான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மாநகராட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே, மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.