தினமணி 12.11.2009
“மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யாவைக் கட்டுப்படுத்துங்கள்’: குலாம் நபி ஆசாத்
சென்னை, நவ. 12: மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், சுகாதாரத் துறைச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி. கு. சுப்புராஜ் வெளியிட்ட அறிக்கை:
“”தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் (என்ஆர்எச்எம்), நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில், இந்திய அளவில் ஒப்பிடுகையில் பல விஷயங்களில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
டாக்டர்களை ஊக்குவிக்க…: குக்கிராமங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தென் மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலன் அடையும் வகையில் அமைவதை தென் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவிலும் சிறிய ஊர்களிலும் உயர் சிறப்பு மருத்துவ சேவை கிடைப்பதில்லை என்பது பொது மக்களின் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு படிப்போரை ஆறு மாதத்துக்கு சிறிய ஊர்களில் நியமனம் செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் யோசனை கூறினார். தமிழகத்தைப் பொருத்தவரை கர்ப்பிணிகளுக்கான வளைகாப்புத் திட்டம், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த தாய்மார்களுக்கும் அளிக்கப்படும் இலவச மதிய உணவு ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது” என்று சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.