தினமணி 25.06.2013
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி
திருச்செங்கோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில்,
திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் மேல்நிலைப் பள்ளி வாயில் அருகில் பேரணியை நகர்மன்றத் தலைவர்
பொன். சரஸ்வதி தொடக்கிவைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் முன்னிலை
வகித்தார்.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய
பதாகைகளை ஏந்திச் சென்றனர். மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அவர்கள் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து குரல் எழுப்பப்பட்டன. பேரணி
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையர் (பொ)
ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆசிரிய,
ஆசிரியைகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.