தினமணி 01.07.2013
தினமணி 01.07.2013
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
சிவகாசி நகராட்சி சார்பில் சனிக்கிழமை மழைநீர்
சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ
மாணவியர் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ. முனுசாமி தலைமை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன், துணைத் தலைவர் கா.அ.அ. அசன்பதுருதீன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறியாளர் மா. முத்து வரவேற்றார். செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு
திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி
சிறப்புறையாற்றி பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மழைநீர்
சேமிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும்
வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் மழைநீரை சேமிக்க வேண்டும். வீடுகளில்
மழைநீர் சேமிக்கப்பட்டால், வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரும் நல்ல
தண்ணீராக மாறிவிடும். எதிர்காலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய
மழைநீர் சேமிப்பு மிகவும் அவசியமாகும் என்ற அவர் பேரணியை கொடியசைத்து
தொடங்கி வைத்தார் . பேரணி நகரின் பிரதான வீதிகளில் சென்று, மீண்டும் பள்ளி
வளாகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் டி.
ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர்மன்றத்
துணைத் தலைவர் சக்திவேல், வட்டாட்சியர் மைகேல்ராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு
அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.