தினமணி 04.07.2013
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகள்
மற்றும் அலுவலகக் கட்டடங்களிலும் ஏற்படுத்த வேண்டும், என பொதுமக்களுக்கு
ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்,
அய்யம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்
பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணிகளை, ஆட்சியர் ந. வெங்கடாசலம் திங்கள்கிழமை
ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர்
சேகரிப்பு கட்டமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர்
தெரிவித்தது:
அய்யம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் 3,929
குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 3,781 குடியிருப்புகளில் மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மீதமுள்ள வீடுகளிலும்
விரைவில் உருவாக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் தூர்ந்துபோய் உள்ள மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்புகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு நிலத்தடி
நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை
ஒவ்வொரு வீட்டிலும், கட்டடத்தின் அளவு, தன்மைக்கேற்ப அமைத்து மழைநீரை
சேமிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, நிலத்தடி
நீர் சேகரிப்பின் அவசியம் கருதி பொதுமக்கள் அனைத்துக் கட்டடங்களிலும் மழை
நீர் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
புதியதாகக் கட்டப்படும்
கட்டடங்களுக்கு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டால்தான், கட்டட
வரைபடத்துக்கான அனுமதியும், சொத்து வரியும் விதிக்கப்படும்.
தவறும்பட்சத்தில், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள்
துண்டிக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.