தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் மேயர் ஆய்வு
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தேங்கியிருந்த நீரை அகற்றுமாறும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில்
பலத்த மழை பெய்தது. வானிலை மையத் தகவலின் படி நகரில் 40 மில்லி மீட்டர்
மழை பதிவாகியிருந்தது.
இதன் காரணமாக பிரதான சாலைகள், சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி குளம்
போல் காட்சியளித்தது. மேலும் நகரின் பல இடங்களில் சாலைகளே தெரியாத
அளவுக்கு தண்ணீரில் மூழ்கியிருந்தது.
மழை நீர் வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக புதன்கிழமையும் பல
இடங்களி்ல் மழை நீர் வடியாமல் தேங்கியிருந்தது. இதில் பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:-
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வரதராஜூலு தெரு சந்திப்பில் மழைநீர் தேங்கியிருந்தது.
மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக அப்பகுதியில் உள்ள மழை நீர் வடிகால்
பழுதடைந்திருந்தது. இதனை சரிசெய்து, தேங்கியிருந்த மழை நீரை அகற்ற
உத்தரவிடப்பட்டது.
மேலும், இப்பகுதியில் உள்ள சில உணவகங்களில் இருந்து வெளியேறும்
கழிவுநீர் மழைநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருந்தது ஆய்வின் போது தெரிய
வந்தது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டது.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.