தினமணி 02.09.2010
மாட்டுத்தாவணியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட்: அமைச்சர் அழகிரியிடம் வியாபாரிகள் மனு
மதுரை, செப்.1: மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் தரைக் கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்யக் கோரி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள காய்கனி வியாபாரிகள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் புதன்கிழமை மனு அளித்து முறையிட்டனர்.
சென்ட்ரல் காய்கறி மார்க்கெட், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே செயல்பட்டு வந்தது. இதனால் நகரில் போக்குவரத்துக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மிக நெருக்கடியாக இருந்து வந்தது.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த மார்க்கெட்டை நகருக்கு வெளியே மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டது. 21.6.2009-ல் புதிய மார்க்கெட்டுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து 12 கோடி மதிப்பில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள அனைத்து நிரந்தரக் கடைகள் மற்றும் தரைக் கடைகள் புதிய மார்க்கெட்டுக்கு புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.
பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள நூற்றுக்கணக்கான தரைக் கடைகளை அங்கிருந்து வெளியேறும்படி, மாநகராட்சி அதிகாரிகள் போலீஸôருடன் சென்று கூறினர். ஆனால், தங்களுக்கு உரிய கடைகள் தரப்படவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸôருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வடக்காவணி மூல வீதி சென்ட்ரல் மார்க்கெட் மேட்டுப் பகுதி மொத்தம் மற்றும் சில்லரை காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சிவநேசன், செயலர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாட்டுத்தாவணியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்பட்டு உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 1000 தரைக் கடைகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. அந்தக் கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஜூனில் 50 ஆயிரம் முன்தொகை மற்றும் மாத வாடகை 700 நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்பேரில், எங்கள் சங்க உறுப்பினர்களான சுமார் 350 தரைக் கடை வியாபாரிகள் 50 ஆயிரத்துக்கு பணவிடை எடுத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி தனிநபர் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் தரைக் கடைகளை தாரைவார்க்க முயற்சி செய்து வருகிறது. இதனால், சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள தரைக் கடை வியாபாரிகளின் நலன் பாதிக்கப்படும். அதனால், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தபடி தரைக் கடை வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கித் தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் வியாபாரிகளுடன் பேச்சு நடத்தினர். அப்போது, அனைவருக்கும் கடைகள் ஒதுக்கித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, வியாபாரிகள் பலர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
இதனிடையே, புதன்கிழமை இரவுக்குள் பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து தரைக் கடைகளை காலிசெய்து புதிய சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, வியாபாரிகள் பலர் தங்களது இடத்தைப் பிடிப்பதற்காக புதிய மார்க்கெட் இடத்திற்குச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வடக்காவணி மூல வீதி சென்ட்ரல் மார்க்கெட் மேட்டுப்பகுதி மொத்தம் மற்றும் சில்லரை காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் கூறுகையில், நாங்கள் சங்க உறுப்பினர்களுக்கு 350 தரைக் கடைகளை ஒதுக்கும்படி கோரினோம். ஆனால், மாநகராட்சி ஆணையர் 200 கடைகளை தற்சமயம் ஒதுக்கித் தருவதாகவும், டி.டி. கொடுக்கும்போது பாக்கி கடைகளைத் தருவதாகவும் தெரிவித்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், கடைகளுக்குத் தொடர்பில்லாத தனியார் நபர்கள் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புச் செய்தனர். இதுகுறித்து நாங்கள் ஆணையரிடம் முறையிட்டோம். அவரும் உரிய நடவடிக்கை மேற்கொண்டதால், தற்போது ஆக்கிமிரப்புச் செய்திருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே, கடைகள் ஒதுக்கீடு விஷயத்தில் ஆளும்கட்சியினரின் தலையீடு அதிகம் இருப்பதாக காய்கறி வியாபாரிகள் இடையே பரவலாக புகார் உள்ளது.