தினமணி 5.11.2009
மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணி ஜனவரிக்குள் முடிவுறும்: ஆணையர்
மதுரை, நவ. 4: மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் (தமிழ்ப் புத்தாண்டு) முடிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.
சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரூ. 6 கோடி செலவில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் அமைப்பதற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும்.
சிறப்பு மருத்துவ முகாம்: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியாவைத் தடுக்கும் வகையில், தினமும் 3 வார்டுகள் வீதம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
நகரில் மழைநீர் தேங்கும் இடம் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் வீரியம் மிக்க கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அனுப்பானடி பகுதி மக்களுக்கு மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. அப்பகுதி மக்கள் வைகை அணை குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அனுப்பானடி பகுதி மக்களுக்கும் வைகை அணை குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதாளச் சாக்கடை சீரமைப்பு: மதுரை மாநகரில் விடுபட்ட சில பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பழுதடைந்துள்ள சாக்கடைகள், மெட்ரோ நிறுவனம் மற்றும் மாநகராட்சி மூலம் சரிசெய்யப்பட்டு வருகின்றன. பயன்படுத்தப்படாத லாரி நிறுத்தங்கள்:மாநகராட்சி சார்பில் ரூ. 7 கோடி மதிப்பில், கோச்சடை, மாட்டுத்தாவணி மற்றும் அவனியாபுரத்தில்லாரி நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இங்கு லாரிகள் நிறுத்தப்படுவதில்லை.
எனவே, இதுகுறித்து போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி கூடுதல் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 2-வது வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் மதுரை மாநகரில் நாள்தோறும் குடிநீர் விநியோகம்செய்வதற்கு, குழாய் இணைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்னும் ஒருவார காலத்துக்குள் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் ஆணையர்.