தினமலர் 20.02.2010
மாநகராட்சிக்கு வழங்கிய இடத்தை சென்னை பெண் அதிகாரி ஆய்வு
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிய இடத்திற்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள புதிய இடத்தை சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் உரக்கிடங்கிற்கு அருகே உள்ள சுமார் 10 ஏக்கர் இடத்தை புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. இதன் அரசு மதிப்பு ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு இடமான தருவைகுளம் கடலோர காவல்படை அலுவலகம் அருகே சுமார் 28 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் அரசு மதிப்பு படி சுமார் 35 ஆயிரத்திற்கு மேல் போவதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மாநகராட்சிக்கு வழங்க உள்ள இடத்தை சென்னை நகராட்சிகளின் நிர்வாக இணை ஆணையர் மகேஸ்வரி முழுமையாக ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.