தினமணி 13.09.2010
மாநகராட்சி ஆகிறது கரூர்?
கரூர், செப். 12: கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயருமா என்பது திங்கள்கிழமை (செப். 13) நடைபெறவுள்ள கரூர் நகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. கரூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நிலையை உயர்த்துதல் தொடர்பாக, அரசிடமிருந்து வரப் பெற்ற ஆணை தொடர்பாக விவாதிக்கப்பட்டு பதிலளிக்கப்படவுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் நிலையை உயர்த்துதல், சேர்த்தல் தொடர்பான நடைமுறைகள் பற்றி அரசாணையில் வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நகராட்சியை முழுவதுமாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அருகாமையிலுள்ள நகராட்சி, ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்கலாம். அவ்வாறு இணைக்க முடிவெடுக்கும் போது தற்போது பதவி வகித்து வரும் உறுப்பினர்கள், தலைவர்கள் பதவிக்காலம் முடியும் வரை பாதிக்கப்படாது. கரூர் மாவட்டம் மாவட்ட பிரிவினைக்கு பிறகு பெரிய அளவில் மற்ற மாவட்டங்களோடு வளர்ச்சிப் பணிகள், அடிப்படை கட்டமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் சமநிலை அடைய வேண்டி அரசு உயர்மட்டத்தில் உயர் அலுவலர்கள் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புள்ளி விவரங்களைக் கொண்டு ஆய்வு செய்து முடிவு எடுத்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட நகராட்சியினுடைய தரம் உயர்ததுதல் பற்றி அரசுக்கு செயற் குறிப்பு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்ப வேண்டி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதப்படி உள்ளாட்சிகளிலுள்ள மக்கள் தொகை அடர்த்தி, தனிநபர் வருமானம், பிரதான விவசாயிகளின் சதம், உள்ளாட்சிகளின் ஆண்டு வருமானம் ஆகியவற்றைக் கணக்கிட்டு இணைக்க வேண்டிய உள்ளாட்சிகள் தொடர்பாக அரசுக்கு செயற் குறிப்பு அனுப்பப்படவுள்ளது.
இதன்படி இனாம் கரூர் நகராட்சி (தேர்வுநிலை) 13.50 ச.கி.மீ, தாந்தோன்றிமலை நகராட்சி (முதல்நிலை) 26.63 ச.கி.மீ, சணப்பிரட்டி (ஊராட்சி) 5.58 ச.கி.மீ. கொண்ட பகுதிகளை இணைத்து கரூர் மாநகராட்சி என தரம் உயர்த்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.