தினமலர் 25.05.2010
மாநகராட்சி ஆசிரியர்களுக்கு சலுகைகள் கல்வித்துறை ஆசிரியர்களைப் போல கிடைக்கும்
மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை ஆசிரியர்களைப் போல சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி ஆசிரியர்கள், அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர்களுக்கு உரிய சம்பளத்தை, உள்ளாட்சி நிர்வாகம் தருகிறது. மாநகராட்சியின் நிதி பாதிக்கப் பட்டால், இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் பாதிக்கப்படுவது வழக்கம். இந்த முரண்பாடு இல்லாமல், மாநகராட்சி ஆசிரியர்களுக்கும் கல்வித் துறையைப் போல சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது.இது குறித்து மாநகராட்சி அனைத்து ஆசிரியர் மன்ற நிர்வாகிகளுடன் மாநகராட்சி தரப்பில் கமிஷனர் செபாஸ்டின் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில், மாநகராட்சி எடுக்க இருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, ஆசிரியர் மன்ற நிர்வாகிகளுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
1.மாநகராட்சி பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், கல்வி ஆண்டு துவக்கத்தில் ஜூன் 1ம் தேதி நிரப்பப்படும்
2.உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக முறையான தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்.
3.ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாள் அன்று ஊதியம் வழங்கப்படும். இவர்களுக்கு ஈட்டிய விடுப்பு மற்றும் பணப்பலன்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
4.பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்ப, ஏற்கனவே பள்ளி கல்வி இயக்குனரிடம் கோரப் பட்டுள்ளது.
5.ஜெய்ஹிந்த்புரம் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6.மாநகராட்சி பாரதிதாசன் மேனிலைப்பள்ளிக்கு எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., நிதியில் ஆய்வகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
7.ஏப்.2003க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு “கான்ட்ரிபியூட்டரி பென்ஷன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
8.மாநகராட்சி கல்வி பிரிவில், தொடக்க கல்விக்கும் மேனிலை கல்விக்கும் தனித்தனி கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த, கல்வித் துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்.
9.மாநகராட்சி கல்வி பிரிவில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
10.மேனிலைப் பள்ளிகளில் அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, நிதி வழங்கப்படும் பாடப்பிரிவுகளை மட்டுமே நடத்த வேண்டும் என்பது சம்பந்தமான உத்தரவு, மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
11.ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 2000ம் ஆண்டு முதல் சிறப்பு சேம நல நிதியில் ஈவுத் தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.