தினத்தந்தி 08.08.2013
மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு தரவேண்டும்

தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஆணையர் தண்டபாணி
வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட
அரங்கில் ஆணையர் தண்டபாணி தலைமையில் நுகர்வோர் மற்றும் தன்னார்வ அமைப்பு
பிரதிநிதிகளுடன் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி
பணிகள் மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையர் பேசியதாவது:–
மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும்
நுகர்வோரின் வசதிக்கேற்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நுகர்வோர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள்
மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மாநகர பகுதியில் மாநகராட்சி
நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நுகர்வோர் தன்னார்வ அமைப்பு
பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
பூங்காக்கள்
மேலும் மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட
அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவை
வழங்கும் கால அவகாசம் பற்றிய விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்
வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குரிய பூங்காக்கள்
மேம்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர்
அருணாசலம், நகர் நல அலுவலர் அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி, பாஸ்கர்,
தனபாலன், ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி
அலுவலர்களுடன் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் புஷ்பவனம், சகுந்தலா சீனிவாசன்,
உமா முத்துசாமி, சேகரன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.