தினமலர் 14.08.2012
மாநகராட்சி கமிஷனர் உத்தரவு சுகாதாரமற்ற இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்கடை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, கமிஷனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சிஎல்லைக்குள், இறைச்சிக்கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன; மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, “தினமலர்’ நாளிதழில் படங்களுடன் நேற்று செய்தி வெளியிடப் பட்டது.அதன் எதிரொலியாக,சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக இறைச்சி கடைகளின் சுகாதார தன்மை குறித்து ஆராயவும், ஆடுவதை கூடம் பயன்பாடு குறித்து கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
நகர் நல அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில்,”சீல்’ வைக்காமல் விற்கப்படும் ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இறைச் சிக்கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது குறித்து சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள இறைச்சி கடைகளை நேரடியாக ஆய்வு செய்து, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென சுகாதார ஆய்வாளர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.பன்றி இறைச்சி கடைகள் இயங்குவது முற்றிலும் தடை செய்யப்படும். கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக, கோழி இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஆட்டிறைச்சி கடைகள் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளும் சுகாதாரமான முறையில் இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும், என்றார்.
கமிஷனர் செல்வராஜிடம் கேட்ட போது,””ஆடுவதை கூடத்தில் கால்நடை டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாகவும் ஆடுவதை கூடங்கள் அமைக்கப் படும். கோழி, மாடு, பன்றி இறைச்சி கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது,” என்றார்.