தினமலர் 09.08.2010
மாநகராட்சி கழிப்பிடம்; ஒரே மாதத்தில் சுத்தம்
கோவை: கோவை மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களை தூய்மைப்படுத்தும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் நகரிலுள்ள அனைத்து கழிப்பிடங்களையும் தூய்மையாக்க இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 63; வடக்கு மண்டலத்தில் 21; மேற்கு மண்டலத்தில் 45;தெற்கு மண்டலத்தில் 55 என, இலவச பொதுகழிப்பிடங்கள் உள்ளன. தெற்கு மண்டலம் தவிர மூன்று மண்டலங்களிலுள்ள 129 இலவச கழிப்பிடங்களை பராமரித்து, சுத்தம் செய்யும் பணியை பெங்களூரை சேர்ந்த “மைக்ரோ ப்யூர் டெக்னாலஜிஸ் லிட்‘ நிறுவனம் குத்தகைக்கு ஏலம் எடுத்துள்ளது. கோவை மாநகரிலுள்ள பொதுக்கழிப்பிடங்களில் துப்புரவு பணிகளை மேற் கொள்ள புதிய திட் டங்களை வகுத்துள் ளது. புதிய திட்டம் குறித்து “மைக்ரோ ப்யூர் டெக்னாலஜிஸ்‘ இயக்குனர் ராஜேஷ்குமார் கூறியதாவது: கோவை நகரில் புழக்கத்திலுள்ள 129 இலவச பொதுக்கழிப்பிடங்களை தூய்மையானதாக மாற்றிக்காட்டுவதுடன், சிறப்பான முறையில் பாராமரிக்கவும் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு வார்டிற்கும் அங்குள்ள கழிப்பிடத்தை தூய்மைபடுத்த ஐந்து துப்புரவு பணியாளர்கள்,இரு மேற்பார்வையாளர்களை நியமித்துள்ளோம். தூய்மைப்படுத்த பிளீச்சிங் பவுடர், பினாயில், சோப்பு ஆயில் வழங்கப்படும். காலை 6.00 மணிக்கு முதல் முறையாக கழிவறையை சுத்தப்படுத்தப்படும். காலை 10.00 மணிக்கு இரண்டாம் முறையும், மாலை 6.00 மணிக்கும் தூய்மையாக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு, குழாயில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய மொபைல் வாகனம் தயார் நிலையில் இருக்கும். வாகனத்தில் ஒரு பிளம்பர், ஒரு எலக்ட்ரீசியன், இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் இருப்பர். இவர்கள், நேரில் சென்று பழுதை சரிசெய்வர். ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தேவையான வாளி, கோப்பைகளை வழங்குவோம். இது தவிர மின்விளக்குகள், தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பணிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு கழிப்பிடத்திலும் இரண்டு அல்லது மூன்று ஓசோனைஸ்டு ஜெனரேட்டர் இயந்திரத்தை பொருத்தப்படும். இவை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை பரவவிடாமல் தடுக்கும்.கழிப்பிடத்துக்கு வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் சோப்பு பயன்படுத்துவதன் அவசியமும் விளக்கப்படும். இலவசமாக சோப்பும் வழங்கப்படும்.இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார்.