தினமணி 31.12.2009
மாநகராட்சி கூட்டத்தில் பேசிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ.
சேலம் மாநகராட்சிக் கூட்டத்துக்கு புதன்கிழமை வந்திருந்த பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தனது தொகுதிப் பிரச்னை குறித்துப் பேசினார்.
அவர் பேசும் போது, “51, 52-வது வார்டுகளான நெய்க்காரப்பட்டி பகுதியில் ராஜ வாய்க்கால் ஓடுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால் மழைக் காலத்தில் ஓடை அடைபட்டு கழிவு நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே இந்த ஓடையை ரூ.2.20 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப் பணி ஆரம்பிக்கும்போது ஓடைக் கரையில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். ஓடை சீரமைக்கப்பட்டதும் கடைகள் கட்டி மாநகராட்சியே வாடகைக்கு விடலாம்.
இதற்குத் தேவைப்படும் நிதியை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ஒதுக்கித் தர தயாராக இருக்கிறேன் என்றார் ராஜேந்திரன்.