தினமணி 22.07.2010
மாநகராட்சி திட்ட நல உதவிகள்: முதல்வர் வழங்கினார்
பள்ளிச் சிறுவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாணவிக்கு இலவச கண் கண்ணாடி வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் மேயர்.
சென்னை, ஜூலை 21: சென்னை மாநகராட்சியின் திட்டங்களின் கீழ், நல உதவிகளை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சியின் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 186 மாணவ மாணவியருக்கு ரூ.20 லட்சம் செலவில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், 20 குழந்தைகளுக்கு இலவசக் கண்ணாடிகளை வழங்கினார் முதல்வர் கருணாநிதி.
இதேபோன்று, சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் விளக்குப் பகுதியில் தசைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளிக்கு மாணவர்களை பெற்றோருடன் அழைத்து வருவதற்காக தாய் நவநீதம் குப்புசாமி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீஜெயா கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தனித்தன்மையுடன் கூடிய பஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாவியை, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் அளித்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் அஷோக் வரதன் ஷெட்டி, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி, துணை ஆணையர்கள் ஜோதி நிர்மலா, பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.