தினகரன் 22.06.2010
மாநகராட்சி நிலைக்குழுவுக்கு கவுன்சிலர்கள் கடும்போட்டி
பெங்களூர், ஜூன் 22: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியின் நிலைக்குழு தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை பிடிப்பதற்கு ஆளும் பாஜவில் கடும் போட்டி நிலவுகிறது.
பெருநகர் மாநகராட்சியின் புதிய மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் பதவியேற்று இரண்டு மாதம் முடிந்து விட்டது. இன்னும் நிலைக்குழு அமைக்காமல் இருப்பதால், பட்ஜெட் தாக்கல் உள்பட பல வளர்ச்சிகள் நடக்காமல் காலதாமதமாகி வருகிறது. ஆளும் கட்சியின் மெத்தன போக்கை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். இதைத்தொடர்ந்து நிலைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தலை வரும் 29ம் தேதி நடத்த மாநில நகர வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
போட்டி
மாநில அரசு மற்றும் பெங்களூர் பெருநகர் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜ தலைமையில் நிர்வாகம் அமைந்துள்ளதால், அக்கட்சி சார்பில் அதிகாரத்தை பிடிப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.
மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு 10க்கும் மேற்பட்ட மூத்த பாஜ கவுன்சிலர்கள் முயற்சித்தனர். பாஜ தலைமையின் ஆலோசனைபடி மேயராக எஸ்.கே.நடராஜ், துணைமேயராக என்.தயானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் பதவி கிடைக்காமல் பி.ஆர்.நஞ்சுண்டப்பா, நாராயணசாமி உள்பட பலர் அதிருப்தியில் உள்ளனர். மேயர் பதவி கை நழுவி போனதை தொடர்ந்து நிலைக்கு குழு தலைவர் பதவி மீது பாஜ மூத்த கவுன்சிலர்கள் கண் வைத்துள்ளனர். அதேபோல் நிலைக்குழு உறுப்பினர் பதவியை பிடிக்கவும் பாஜ கவுன்சிலர்கள் மத்தியில் லாபி தொடங்கியுள்ளது.
சிபாரிசு
நிலைக்குழு உறுப்பினர்கள் யார் என்பதை மாநகரில் உள்ள பாஜ எம்.எல்.ஏகள் சிபாரிசு செய்ய வேண்டும் என்று மேயர் கேட்டு கொண்டுள்ளதால், பாஜ கவுன்சிலர்கள் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை மொய்க்க தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக இருந்தபோது, 8 நிலைக்குழுகள் இயங்கி வந்தது. இதில் ஒரு குழுவில் 9 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தற்போது 198 வார்டுகள் கொண்ட பெருநகர் மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால், நிலைக்குழுவின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்துவதுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12ஆக அதிகரிக்கவும் மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பியது.
எட்டு குழு
இதற்கு ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெருநகர் மாநகராட்சி நிலைக்குழுவின் எண்ணிக்கையை பழைய படி 8 என்ற அளவில் வைத்து கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
மாநகராட்சியில் நிதி மற்றும் வரி, பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சி, பொது செயல் திட்டம், தணிக்கை, மேல்முறையீடு, தோட்டகலை மற்றும் விற்பனை ஆகிய நிலைக்குழுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதன் தலைவகர்களாக பி.ஆர்.நஞ்சுண்டப்பா, சாந்தகுமாரி, பி.வி.கணேஷ், வெங்கடேசமூர்த்தி, சோமசேகர், ரங்கண்ணா, சதாசிவா மற்றும் எல்.சீனிவாஸ் ஆகியோரை நியமனம் செய்ய பாஜ தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
எதிர்க்கட்சிகள்
பெருநகர் மாநகராட்சியில் பாஜ தனி பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், நிலைக்குழு தலைவர் பதவி அக்கட்சி கவுன்சிலர்களுக்கு கிடைக்கும். அதே சமயத்தில் நிலைக்குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உறுப்பினராகும் வாய்ப்புள்ளது.
மேயர் மனது வைத்தால், 8 நிலைக்குழுவில் 2 நிலை குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கலாம், இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மேயருக்கு உள்ளது.
தற்போது வரும் தகவல் படி நிலைக்குழு தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு கொடுக்கும் நிலையில் மேயர் இல்லை.
29ம் தேதி தேர்தல்