தினகரன் 28.06.2010
மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு பெசன்ட்நகர் இடுகாட்டில் சமாதிகளை இடிக்க தடை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 28: பெசன்ட் நகர் இடுகாட்டில் உள்ள சமாதிகளை இடிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த டாக்டர் அருள்பிச்சை நாராயணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
எங்கள் குடும்பத்தில் அனைவரும் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் கொள்கைகளை பின்பற்றி வழிபாடுகளை நடத்தி வருகிறோம். எனது தந்தை முத்துக்குமாரசாமி, கடந்த 98ம் ஆண்டு காலமானார். அவருக்கு பெசன்ட் நகர் இடுகாட்டில் சமாதி அமைத்தோம். இதற்காக, மாநகராட்சியிடம் ரூ.9 ஆயிரம் செலுத்தி அனுமதி பெற்றோம். வள்ளலார் கொள்கையை பின்பற்றி சமாதியை கோயிலாக வணங்கி வந்தோம்.
இந்நிலையில், பெசன்ட் நகர் இடுகாட்டில் உள்ள சமாதிகள் அனைத்தையும் இடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி திடீரென இறங்கியுள்ளது. இதுபற்றி முன்கூட்டியே எங்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை. இது சட்ட விரோதமானது. எனது தந்தையின் சமாதி பாதி இடிக்கப்பட்டுள்ளது. அதை மேற்கொண்டு இடிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தனபாலன், அரிபரந்தாமன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் வேல்முருகன் ஆஜராகி, “சமாதிகளை இடித்து விட்டு அந்த இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, சமாதியை இடிக்க தடை விதிக்க வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “பெசன்ட்நகர் இடுகாட்டில் உள்ள சமாதிகளை இடிக்க இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த வழக்கில் அடுத்த மாதம் 9ம் தேதி மாநகராட்சி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்