தினமணி 28.04.2010
மாநகராட்சி முழுவதும் வீதி பெயர் பலகைகள் அமைக்க வலியுறுத்தல்
திருப்பூர், ஏப்.27: வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் படும் அவதியை குறைக்க திருப்பூர் மாநகராட்சி பகுதி முழுவதும் வீதிகளின் பெயர்களை தெரிவிக்கும் பலகைகள் அமைக்க மாநகராட் சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகமுள்ள திருப்பூருக்கு தொழில் நிமித்தமாகவும், உறவினர்களை காணவும் தினந்தோறும் வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு திருப்பூருக்கு வரும் வெளியூர் நபர்களுக்கு தெருக்களின் பெயர்களை தெரிவிக்கும் வகையில் எவ்வித பெயர் பலகைகளும் வைக்கப்படவில்லை. இதனால், புதியதாக திருப்பூருக்கு வருவோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான பாதிப்புகளை தவிர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் அனைத்து தெருக் களின் துவக்கத்திலும் அதன் பெயரை குறித்தும் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் கங்கா எஸ்.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமிக்கு அனுப்பியுள்ள மனுவில் மேலும் கூறியது:
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருப்பூர் மாநகரில் இயங்கி வரும் மகப்பேறு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தவிர, மகப்பேறு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டு மருத்துவர்களும் காலஅட்டவணைப்படி பணியில் இருப்பதில்லை.இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருதி மகப்பேறு மருத்துவமனைகள் முறையாக இயங்குகின்றனவா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.