தினமணி 07.08.2013
மதுரை மாநகராட்சியில் நீண்டகாலமாக வரி செலுத்தாமல்
வரி நிலுவை உள்ளவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக,
ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள
சாக்கடை பராமரிப்புக் கட்டணம், பாதாளச் சாக்கடை பங்களிப்புத் தொகை, தொழில்
வரி மற்றும் மாதவாடகை கடைகளின் வாடகைத் தொகை உள்ளிட்ட வரிகளை பலர்
நீண்டகாலமாகச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
வரி பாக்கி வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் நிலுவை
வரிகளைச் செலுத்த வேண்டும். இல்லையேல், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின்
பெயர் பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், நிலுவை வரி செலுத்தாதவர்கள் மீது, மதுரை மாநகராட்சி சட்டம்
1971-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.