தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக ஆணையர்
நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே
கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை
வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பூ மார்க்கெட்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த அவர், உணவு
மற்றும் குடிநீர் தரமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அனைத்து
அம்மா உணவகங்களிலும் ஈக்களைக் கவரும் இயந்திரம் அமைக்குமாறும், டியூப்
லைட்களுக்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகளைப் பொருத்துமாறும்
அறிவுறுத்தினார்.
கவுண்டம்பாளையம் குப்பைக் கிடங்கில் பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்தை
அவர் பார்வையிட்டார். அதன் பின்னர், மேட்டுப்பாளையம் சாலையில் 158 கி.மீ.
தூரத்துக்கு சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணியைப் பார்வையிட்டார்.
உக்கடம் லாரிப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட்
கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். ஒண்டிப்புதூர் கழிவுநீர்
சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.
பேரூர்- செல்வபுரம் சாலையில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியைப்
பார்வையிட்ட நகராட்சி நிர்வாக ஆணையர், பகல் நேரங்களில் போக்குவரத்து
அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் அதிக ஆட்களைக் கொண்டு பணியை விரைந்து
முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பிறகு, மாநகராட்சி அலுவலகத்தில் கோவை மேயர் செ.ம.வேலுசாமியுடன்,
மாநகரில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி
ஆணையர் க.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார்,
கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.