தினமணி 17.09.2009
மீண்டும் அழகு பெறுமா தொண்டி கடற்கரை?
திருவாடானை, செப். 16: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையை மீண்டும் அழகுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொண்டி கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 1978 ஆம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இதை அழகுபடுத்தும் முயற்சியில் மேற்கொண்டு சில பணிகளைச் செய்தார்.
அதைத் தொடர்ந்து இந்தக் கடற்கரைக்கு “பிரபாகர் பீச்‘ என்று பெயரிடப்பட்டது. அந்தப் பெயரை இன்னும் மக்கள் பேசிக் கொண்டுள்ளனர். அதில் இருந்து இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வளவு சிறப்புடைய தொண்டி கடற்கரை தற்போது களையிழந்து, சுகாதாரமற்ற நிலைமையில் உள்ளது. எந்தவித வசதியும் இன்றி, “பீச்‘ என்று சொல்லும் அளவுக்கு எந்தச் சுவடுகளையும் இங்கு காணவில்லை (படம்).
இதனால் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
தொண்டி நகரம் 25 ஆயிரம் மக்கள்தொகையைக் கொண்டு வளர்ந்து வரும் நகரமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு எந்தவித பொழுபோக்கும் இல்லாத நிலையில் இந்தக் கடற்கரையை மீண்டும் அழகு பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்..
இது சம்பந்தமாக தொண்டி பேரூராட்சித் தலைவர் பாலுச்சாமி கூறியது: தொண்டி கடற்கரையை அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு சுற்றுலா வாரியம் மூலம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்றார்.