தினமணி 05.03.2010
மீனாட்சி அம்மன் கோயில் தேர் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றம்
மதுரை, மார்ச் 4: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கான தேர் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள், தினமணி செய்தி எதிரொலியாக வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கான தேர்கள் கீழமாசி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதைச் சுட்டிக்காட்டி தினமணியில் 4}ம் தேதி (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து, தேர் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தாதவாறும், குப்பைகளைக் கொட்டாதவாறும் தாற்காலிகத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்த மாநகராட்சி அதிகாரிகளையும், பணியாளர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.