தினமணி 28.02.2013
முதலில் சீரான குடிநீர்;பிறகு கட்டணத்தை உயர்த்தலாம்!
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்க் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்ட தீர்மானம், மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. “முதலில் தண்ணீர் வழங்குவோம்; அதன்பிறகு கட்டணத்தை தீர்மானிக்கலாம்’ என மாமன்றத்தில் பொதுவான கருத்து எழுந்தது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருள் விவரம்:
திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 221 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் நிறைவடையவுள்ளன.
இத்திட்டத்தின் மாநகராட்சி பங்குத் தொகை ரூ. 43.74 கோடி. பெறப்பட்ட கடன் தொகை ரூ. 111.25 கோடி கடனில் தவணைத் தொகை செலுத்த வேண்டும்.
மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிதியிலிருந்து திட்டப் பணிகளுக்கு இறுதிப் பட்டியல் தொகை வழங்க வேண்டும்.
எனவே, கடந்த 2008-ல் மாமன்ற ஒப்புதலின்படி குடிநீர் இணைப்புக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கு மாதம் ரூ. 200, வைப்புத் தொகை ரூ. 5000, குடிநீர் அல்லாத பயன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 600, வைப்புத் தொகை ரூ. 10,000.
தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 1000, வைப்புத் தொகை ரூ. 10,000.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
மு. வெங்கட்ராஜ் (சுயே.): விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் நிலையில் நாமும் குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். குடிநீர் விநியோகம் சீராகவும் இல்லை; சுத்தமாகவும் இல்லை.
மு. அன்பழகன் (திமுக): இதே திட்டத்தைச் சொல்லி ஏற்கெனவே வீட்டு இணைப்புகளுக்கு ரூ. 75-ல் இருந்து ரூ. 100 உயர்த்தியிருக்கிறோம். இரண்டாம் முறையாக உயர்த்தலாமா? மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்றால் அரசிடமிருந்து தேவையான தொகையை கேட்டுப் பெறலாம். இத்திட்டப் பணிகளை முழுமையாக முடித்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்த பிறகு கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
ஜெ. சீனிவாசன் (அதிமுக): விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். அதிமுக அரசு எந்த விதத்திலும் காரணம் இல்லை. அதேபோல, இந்தத் திட்டமும் கடன் வாங்கிச் செய்வது என்று முடிவு செய்தது திமுக அரசுதான். கடன் வாங்குவது அவர்கள்; பிறகு அதைக் கட்ட வேண்டும் என்ன நிலை வரும்போது அதிமுக ஆட்சியில் இருக்கிறது.
தி. ராமமூர்த்தி (மதிமுக): குடிநீர் முழுமையாக வழங்கியபிறகே கட்டணம் குறித்துப் பேச வேண்டும். எனவே இத்தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்.
அ. ஜெயா (மேயர்): பணிகளை முடித்துவிட்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். அதுவரை வேறு வகையில் நிதி திரட்ட யோசிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, குடிநீர்க் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, குடிநீர் இணைப்புகளுக்கு அளவுமானி வைப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அடுத்த தீர்மானமும் ஒத்திவைக்கப்பட்டது.