தினமலர் 29.04.2013
முதலில் நல்ல மனிதர் அப்புறம்தான் இன்ஜினியர் மாநகராட்சி கமிஷனர் பேச்சு
கோவை:””சமூகத்தில்
டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் போன்ற அங்கீகாரம் பெறுவதற்கு முன், “நல்ல
மனிதர்’ என்ற பெயரை எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என்று
கோவை மாநகராட்சி கமிஷனர் லதா பேசினார்.கோவை அவினாசிலிங்கம் பல்கலையில்
இறுதியாண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் நிகழ்ச்சி மற்றும் பிரிவுபச்சார
விழா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. மனையியல் முதன்மையர் வரவேற்றார்.
பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
கோவை மாநகராட்சி
கமிஷனர் லதா, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
சுயஒழுக்கத்துக்கு
ஒவ்வொருவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். சுயஒழுக்கத்தின் மூலமே
முன்னேற்றத்தை அடையமுடியும். நாம் நமது உடல் மொழிகளில் அதிக கவனம்
செலுத்தவேண்டும். நாம் கேட்கும் விஷயங்கள் நேர்மறையாக இருந்தாலும்,
எதிர்மறையாக இருந்தாலும், ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தை
திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது, இறுதியாண்டை முடித்து
செல்லும் மாணவ மாணவியர், இன்ஜினியர், டாக்டர், கலெக்டர் போன்ற பணிகளில்
இருப்பதை காட்டிலும் நல்ல மனிதர்களாக இருக்கவேண்டும். அதையே இச்சமூகம்
விரும்புகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.மாணவியர் அனைவரும் விளக்கேற்றி,
உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன்,
பதிவாளர் கவுரி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.