தினமணி 26.08.2014
முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு
தினமணி 26.08.2014
முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு
கோவை மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.237 கோடிக்குத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
காட்மா சங்கம்: தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், அரை வட்டச் சாலை,
அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட
பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என
அறிவித்துள்ளார்.
கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தரும் திட்டம் கோவையில் முதல்
முதலாகச் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் மழை நீர் வடிகால்
வசதியும் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதை
கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர்
சங்கம் (காட்மா) சார்பில் வரவேற்கிறோம் என காட்மா தலைவர் ரவிக்குமார்
தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: தமிழக முதல்வர் கோவைக்கு அறிவித்த
திட்டங்களை வரவேற்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்களின் மூலம் கோவை
மாநகரின் வளர்ச்சி அதிகரிக்கும்.
அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,
லாரி நிறுத்தத்தை மாற்றுவது உள்ளிட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் டி.நந்தகுமார்
தெரிவித்துள்ளார். முதல்வர் கோவைக்காக அறிவித்த பல்வேறு திட்டங்களை கோவை
மாவட்ட சிறுதொழில் சங்கமான கொடிசியாவும் வரவேற்றுள்ளது.