முதல்வருக்கு திருச்செங்கோடு நகராட்சி நன்றி
திருச்செங்கோடு நகரில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 7.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செங்கோடு நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பொன். சரஸ்வதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் (பொ) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி பேசியது:
திருச்செங்கோடு நகராட்சியில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 96,431 பேருக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் பொன்விழா ஆண்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள பொன்விழா ஆண்டு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மேல்நிலைத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ. 7.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிக்கு கடந்த 9-ஆம் தேதி, சென்னையில் காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றியை நகர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
தேர்வு நிலை நகராட்சியான திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருவாய் ரூ. 12.74 கோடி ஆகும். செலவு ரூ. 12.70 கோடி ஆகும். நகராட்சியின் வருவாயைப் பெருக்க காலி இடங்களில் நிரந்தரக் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் கூடும். ஆகவே, சந்தைப்பேட்டையின் கிழ்புறம் உள்ள காலி இடத்தில் கடைகளுடன் கூடிய வணிக வளாகம் ரூ. 20.10 கோடியில் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அரசின் நிர்வாக அனுமதி, நிதி ஒதுக்கீடு மானியம் மற்றும் கடன் உதவி கோரி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பிரேரணை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல, எஸ்எஸ்டி சாலையில் தினசரி நாளங்காடி அருகில் ரூ. 12.60 கோடியில் வணிக வளாகம் கட்டவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார் பொன். சரஸ்வதி.
பிறகு, உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.