தினமலர் 19.03.2010
முழு தகவல் தர மாநகராட்சி வேண்டுகோள் : மக்கள் தொகை கணக்கெடுக்க ஆயத்தம்
திருப்பூர் : ‘மக்கள் தொகை கணக் கெடுப்பு துவங்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் முழு தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்; கணக்கெடுப்பாளர் கேட்கும் அனைத்து தகவல்களையும் தர ஆயத்தமாக இருக்க வேண்டும்‘ என, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
2011ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு, மாநகராட்சி பகுதியில் ஜூன் மாதம் துவங்குகிறது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களின் முழுத்தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:அரசின் எல்லா திட்டங்களை வடிவமைக்கவும், நிறைவேற்றவும் நாட்டின் மக்கள் தொகை மற்றும் புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1881 முதல் பத்தாண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. 2011 பிப்., 9 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக, நடப்பாண்டில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் தேதியில் இருந்து ஜூலை 15 வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு நடக்கிறது.அனைத்து மக்களுக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்க, நாட்டில் உள்ள அனைவரின் விபரங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒன்றை தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து பொதுமக்களிடம் இருந்தும் அவர்களை பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் பணி, வீடுகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும், அதே நேரத்தில் தனி அட்டவணையில் சேகரிக்கப்படும்.எனவே, ஜூன் முதல் தேதியில் கணக்கெடுப்பாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒரு அட்டவணையில் வீடுகள் பற்றியும், மற்றொரு அட்டவணையில் வீடுகளில் வசிக்கும் நபர் பற்றியும் விபரங்களை சேகரிப்பர்.வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள், வீட்டில் உள்ள அனைவரின் முழுப்பெயர்; பிறந்த தேதி; பிறந்த ஊர், தாய், தந்தை மற்றும் துணைவர்/துணைவியின் முழுப்பெயர்; தற்போதைய வசிக்கும் முகவரி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கேட்பர்.சில மக்களுக்கு இந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை, என கண்டறியப்பட்டுள்ளது.
சரியான பிறந்த தேதி, அஞ்சல் எண்ணுடன் கூடிய சரியான முகவரி; தாய், தந்தை, துணைவரின் முழுமையான பெயர் ஆகியவற்றை பதிவு செய்தால் தான், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உங்களைப் பற்றிய விபரங்கள் சரியாகப் பதியப்படும். எனவே, கணக்கெடுப்பாளர்கள் வீட்டுக்கு வரும் முன்பே, மேற்கண்ட விபரங்களை தயாராக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கெடுப்பாளர் கேட்கும் போது, எளிதாக வழங்க முடியும்.எதிர்காலத்தில் நமது தேசத்தின் பாதுகாப்பை வலுவூட்டவும், பல்வேறு தருணங்களில் நம்மை அடையாளம் காணவும் தேசிய மக்கள் தொகை பதிவேடும், பிரத்யேக அடையாள அட்டையும் பயனுள்ளதாக அமையும். இத்திட்டம், தன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, கணக்கெடுப்பாளர்களுக்கு அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் ஜெயலட்சமி தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில்: மாநகராட்சியைப் பொறுத்தவரை, மக்கள் தொகை கணக்கெடுக்க தயார் நிலையில் உள்ளது. முதன்மை கணக்கெடுப்பாளராக கமிஷனர் ஜெயலட்சுமி, பொறுப்பு அலுவலராக உதவி கமிஷனர் வேலு நியமிக்கப்பட்டுள்ளனர்.தற்போது, வீட்டுப்பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. 125 முதல் 150 வீடுகள் வரை ஒரு தொகுப்பாக அமைக்கப்படுகிறது அல்லது 6,750 மக்கள் தொகை ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது. இந்த அடிப்படையில், வீட்டுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் வீட்டுப்பட்டியல் தொகுப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும்.கணக்கெடுப்பாளர்களாக, அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மாநகராட்சி பகுதிக்குள் 850 கணக்கெடுப்பாளர்கள் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என, தனி அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வரும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டர் டிரெய்னர்‘களுக்கு ஏப்., 5, 6, 9ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.