தினமணி 4.11.2009
மெரீனாவில் கிரிக்கெட் விளையாடத் தடை!
சென்னை, நவ. 3: மெரீனா கடற்கரையின் உள்புறச் சாலையில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.இதற்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் விளையாட்டுத் திடல்களில் கிரிக்கெட் விளையாடலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
மெரீனா கடற்கரையின் மணல் பகுதி நெடுகிலும் உள்ள உள்புறச் சாலையில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விடுமுறை நாள்களில் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.
இந்த நிலையில், மெரீனா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி பல கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக கடற்கரையின் உள்புறச் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகளில் பழங்கால லாந்தர் விளக்குகள் போன்ற மின் விளக்குகள் பல லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.
காமராஜர் சாலை – உள்புறச் சாலை இடையே புல்தரைகளுடன், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு பூங்கா போல மெரீனா கடற்கரை வளாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அதிரடி அறிவிப்பு… இந்த நிலையில், மெரீனாவில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட செய்தி:
மெரீனா கடற்கரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் குறிப்பாக காலை நேரங்களில் மக்கள் பெருமளவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு உடனடியாகத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. கிரிக்கெட் விளையாடுவோர் சென்னை நகரில் உள்ள அனைத்து மாநகராட்சி விளையாட்டுத் திடல்களிலும் விளையாடிக் கொள்ளலாம்.
எங்கெங்கு விளையாடலாம்? மே தின பூங்கா விளையாட்டுத் திடல், கோபாலபுரம் விளையாட்டுத் திடல், டர்ன்புல்ஸ் சாலை திடல், நந்தனம் விரிவாக்கம் திடல், ஷெனாய் நகர் திருவிக நகர் திடல், எழும்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம், பட்டினம்பாக்கம் வீட்டு வசதி வாரிய விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மாநகராட்சிக்குச் சொந்தமான 228 விளையாட்டுத் திடல்களை கிரிக்கெட் விளையாட பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தனது செய்திக் குறிப்பில் போலீஸ் ஆணையாளர் டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.