தினமணி 30.09.2009
மேயரை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்
சேலம், செப். 29: புதிய பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி, நடைபாதை வியாபாரிகள் சேலம் மாநகராட்சி மேயரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடியாக அகற்றியது.
இதையடுத்து தங்களுக்கு பஸ் நிலையம் பகுதியிலேயே இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு இடம் ஒதுக்குவது குறித்து ஆய்வு நடத்த, மாநகராட்சி உதவி ஆணையர் நெப்போலியன், பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்டோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
ஒரு வாரம் ஆன நிலையிலும் மாற்று இடம் ஒதுக்கித் தராததால் அதிருப்தி அடைந்த நடைபாதை வியாபாரிகள் சுமார் 50 பேர், செவ்வாய்க்கிழமை மேயர் ரேகா பிரியதர்ஷிணியை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து மாலைக்குள் இடம் தேர்வு செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாலை 5 மணியளவில் மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் புதிய பஸ் நிலையம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். “நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் இடம் இறுதி செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடும்‘ என்றும் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.