தினகரன் 20.10.2010
மேயர் பிருத்விராஜ் சகானி தகவல் சி.வி.சி. கேட்டுள்ள விளக்கங்களுக்கு மாநகராட்சி விரைவில் பதில் தரும்
புதுடெல்லி, அக். 20: காமன்வெல்த் போட்டி தொடர்பான திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு மாநகராட்சி விரைவில் பதில் அளிக்கும் என்று மேயர் பிருத்விராஜ் சகானி தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டி கட்டுமானப் பணிகள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பணிகள் தொடர்பாக மாநகராட்சியிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு மாநகராட்சியிடம் இருந்து தங்களுக்கு இன்னமும் பதில் வரவில்லை என்றும் சி.வி.சி. அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் பிருத்விராஜ் சகானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
காமன்வெல்த் போட்டிக்காக அதிகாரிகள் கடும் பணிச்சூழலில் இருந்தனர். இப்போது போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அதிகாரிகளுக்கு வேலைப்பளு குறைந்துள்ளது. இதனால் சி.வி.சி. கேட்ட அனைத்து விளக்கங்களுக்கும் விரைவில் பதில் அனுப்பப்படும்.
எந்த அதிகாரியும் தன்னுடைய கடமையில் இருந்து தப்ப முடியாது. சி.வி.சி. கேட்டுள்ள அனைத்து விளக்கங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டும்.
அநேகமாக சி.வி.சி.யின் அனைத்து கேள்விகளுக்கும் ஏற்கனவே பதில் அனுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதுதவிர கூடுதலாக சி.வி.சி.யில் இருந்து விளக்கங்கள் கேட்டு எனக்கு தகவல் அனுப்பப்பட்டால், அதையும் தர தயாராக உள்ளோம்.
இவ்வாறு மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: காமன்வெல்த் போட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:
காமன்வெல்த் போட்டி தொடர்பான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரிப்பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ஆவணங்களை இறுதி செய்து வருகின்றனர். காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முதலில் விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஒருங்கிணைப்புக் குழு மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இரு துறையினரும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
ஆனால், முறைகேடுகள் தொடர்பாக இதுவரையில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முதலில் பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அதில் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்து கொண்ட பின்னர்தான் வழக்கு பதிவு செய்யப்படும். இதுபோன்ற விசாரணையை எல்லா துறையினரும் நடத்துவது வழக்கம். இதுதொடர்பாக சோதனைகளையும் மேற்கொள்ள இரு பிரிவினருக்கும் அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.