தினமலர் 29.03.2010
ரயில் விடக்கோரி உண்ணாவிரதம் நகராட்சித் தலைவர் அறிவிப்பு
மேட்டுப்பாளையம் : கோவைக்கு கூடுதல் ரயில்விடக் கோரி, மேட்டுப்பாளையம் மக்களுடன் இணைந்து ஏப். 4ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நகராட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் சத்தியவதி வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டுப்பாளையம் பாரதி நகர் ரயில் ரோட்டை தாண்டி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் நகருக்கு வந்து செல்கின்றனர். எனவே, இவ்வழியாக புதியதாக ‘ரயில்வே கேட்‘ அமைக்க வேண்டும். காட்டூர் ‘ரயில்வே கேட்‘ மிகவும் சிறியதாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், இந்த ‘கேட்‘டை பெரியதாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் உள்ள ‘கேட்‘டை காலை 6.00 லிருந்து இரவு 9.00 மணி வரை திறந்து வைக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் ஏராளமான மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், கட்டடத் தொழிலாளர் கோவைக்கு செல்கின்றனர். பஸ்களில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே, பாதுகாப்பு இல்லாத நிலையில் பயணம் செய்கின்றனர்.
இந்த சங்கடங்களைத் தவிர்க்க, கோவை – மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும். இக்கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றக் கோரி, மேட்டுப்பாளையம் நகர மக்கள் சார்பில், வருகிற ஏப். 4ம் தேதி பஸ் ஸ்டாண்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு சத்தியவதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். காங்., கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் அறிவித்துள்ள இந்த போராட்டம், மேட்டுப்பாளையம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.