தினமணி 04.12.2013
ராயபுரம் ரயில் நிலையத்தை இடிக்கக் கூடாது: சிஎம்டிஏ
தினமணி 04.12.2013
ராயபுரம் ரயில் நிலையத்தை இடிக்கக் கூடாது: சிஎம்டிஏ
ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக
மாற்றுவதற்கு ரயில் நிலைய கட்டடத்தை இடிக்க அனுமதி அளிக்குமாறு சென்னை
பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) தெற்கு ரயில்வே முன் வைத்த
கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருப்பதால்,
அந்தப் பட்டியிலில் இருந்து நீக்குமாறு சிஎம்டிஏவிடம் தெற்கு ரயில்வே
கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த ரயில் நிலைய கட்டடத்தை பாரம்பரிய
சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்று சிஎம்டிஏ
தெரிவித்துள்ளது.
2012-2013 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில்
நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில்
முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற எவ்வித
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் 2013-2014-ஆம் ஆண்டு ரயில்வே
பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்காக நிதியும்
ஒதுக்கப்படவில்லை.
ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 37
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2012-ஆம் ஆண்டு கையெழுத்திட்டு கோரிக்கை
விடுத்தனர்.
ரயில்வே துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர் குழு ராயபுரம் ரயில்
நிலையத்தை 2012-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஆய்வு செய்தது. அப்போது
ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டுமென்றால் அதன்
பாரம்பரியமிக்க கட்டடத்தை இடிக்க வேண்டும். இப்போது இந்த ரயில் நிலையம்
பாரம்பரியமிக்க கட்டடங்ளை உள்ளடக்கிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும
பட்டியலில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இருந்து ரயில் நிலையம்
நீக்கப்பட்டால் மட்டுமே ரயில் முனையமாக மாற்றும் பணிகளை ரயில்வே நிர்வாகம்
மேற்கொள்ள முடியும்.
இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும பாரம்பரியமிக்க கட்டடங்களின்
பட்டியலில் இருந்து ராயபுரம் ரயில் நிலையத்தை நீக்க வேண்டும் என்று
கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த சில வாரத்துக்கு முன்பு இது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கான கூட்டத்தில் தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராயபுரம் ரயில் நிலையத்தை பாரம்பரியச் சின்னத்தில் இருந்து
அகற்ற முடியாது என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
ராயபுரம் ரயில் நிலையம் வழியாக தற்போது 15 எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்றுகொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் 1856-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
ராயபுரம் ரயில் நிலையம். இது, நாட்டிலேயே 3-ஆவது பழமையான ரயில் நிலையம்
என்பது குறிப்பிடத்தக்கது.