தினகரன் 17.08.2010
வயர்கள், தரை விரிப்புகளை காப்பாற்ற நடவடிக்கை விளையாட்டு மைதானங்களில் செப்டம்பரில் எலி பிடிக்கும் பணி
புதுடெல்லி,ஆக.17: வயர்கள், தரைவிரிப்புகளை காப்பாற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களில் அடுத்த மாதம் எலி பிடிப்பு பணிகள் தொடங்குகின்றன. இதில், 90 கால்நடை மருத்துவத் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. நகரில் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக காமன்வெல்த் போட்டி மைதானங்கள் அமைந்துள்ள கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி பகுதியில் எலிகள் அதிகளவில் உள்ளன.
போட்டி நடக்கும் மைதானங்களில் உள்ள அழகான தரைவிரிப்புகள், அலங்கார பிளைவுட் வேலைப்பாடுகள், தரைக்குக் கீழே செய்யப்பட்டுள்ள கேபிள் வயரிங் ஆகியவற்றை எலிகள் கடித்துக் குதறி விடும் அபாயம் உள்ளது. மேலும், போட்டியின்போது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் எலிகளால் தொல்லை ஏற்படலாம் என்பதால், முன்கூட்டியே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மைதானங்களில் எலி பிடிப்பு பணிக்காக 600 எலிப்பொறிகள் மற்றும் 100 கிலோ எலி ஒழிப்பு மருந்துகளை மாநகராட்சி வாங்குகிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செப்டம்பர் 24ம் தேதியில் இருந்தே பல நாடுகளிலிருந்தும் வீரர்கள் டெல்லிக்கு வரத் தொடங்கி விடுவார்கள். அதனால் விளையாட்டு கிராமம் உள்ளிட்ட போட்டி நடைபெறவுள்ள அனைத்து மைதானங்களையும் சுத்தமாக வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மைதானத்தின் தரைவிரிப்புகள், வயரிங் வேலைகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க எலிகளை பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக்குழுவினர் கேட்டிருந்தனர்.
ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொறி களும், எலி மருந்துகளும் வரும் 20ம் தேதிக்குள் எங்கள் கைக்கு வந்து விடும். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மைதானங்களில் எலிகளை பிடிக்கும் பணிகளை தொடங்கிவிடுவோம். 600 எலிப்பொறிகளையும் மைதானங்களின் பல பகுதிகளில் வைப்போம். பிடிபடும் எலிகள் மலைப்பகுதியில் கொண்டு போய் விடப்படும். எலி பிடிக்கும் பணியில் கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த 90 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
செப்டம்பர் 20ம் தேதிக்கு முன்னதாக, எல்லா காமன்வெல்த் மைதானங்களிலும் எலிகள் மற்றும் பூச்சித் தொல்லைகள் அறவே ஒழிக்கப்பட்டு விடும். மைதானங்கள் தவிர, ஓட்டல்கள் நிறைந்த பகுதிகளிலும் எலி பிடிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நடத்தவுள்ளது என்றார்.