தினமணி 18.09.2009
‘வரிச் சலுகைகள் படிப்படியாக வாபஸ்’: சி. ரங்கராஜன்
ஹைதராபாத், செப். 17: சர்வதேச பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீட்பதற்காக தொழில்துறைக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி. ரங்கராஜன் (படம்) தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற அவர் இத்தகவலைத் தெரிவித்தார். “”சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம்,”- குறித்த தலைப்பில் அவர் பேசியதாவது:
தற்போது பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதனாலேயே அவசர அவசரமாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது. பணவீக்கம் தற்போது மைனஸ் நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இவற்றையெல்லாம் வைத்து அதனடிப்படையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும்.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இருப்பினும் அடுத்த நிதி ஆண்டில் இது நிச்சயம் அதிகமாக இருக்கும். 2010-11-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் முதல் 8 சதவீத அளவுக்கு இருக்கும். சர்வதேச அளவிலான தேக்க நிலை மீட்சியடையும்போது நமது பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரிச் சலுகைகள் அளித்ததால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது. ஆனால் இத்தகைய சலுகைகள் கூடுதல் செலவினம் என்பதையும் உணர வேண்டும்.
ஒட்டுமொத்த செலவினத்தைக் கணக்கில் கொள்ளும் அதேநேரத்தில் அதன் பலனையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பள்ளம் தோண்டி அதிலிருந்து ஏற்கெனவே உள்ள குழிகளை இட்டு நிரப்புவதால் பலனிருக்காது.
அன்னிய முதலீடானது கடந்த நான்கு மாதங்களாக குறைந்து வருகிறது. 2007-08-ம் நிதி ஆண்டில் 1,080 கோடி டாலராக இருந்த அன்னிய முதலீடு 2008-09-ம் நிதி ஆண்டில் 900 கோடி டாலராகக் குறைந்துவிட்டது என்றார் ரங்கராஜன்.