தினமலர் 08.11.2013
வரி செலுத்தவில்லையா..குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது
கோவை : கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்தாமலோ, நிலுவை வைத்திருந்தாலோ, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை, அக்., 15க்குள் செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாமல் மாநகராட்சிக்கு நிலுவை வைத்திருப்பவர்களின் பட்டியல் தயார் செய்து, குடிநீர் துண்டிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
“பொதுமக்கள், 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைகளை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுத்து நிறைவடைந்து விட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் நிலுவையின்றி சொத்துவரி செலுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தளத்துக்கு சொத்துவரி செலுத்தாமல் இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்படும். மாநகரில் தொழில் புரிந்து வரும் தனிநபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில்வரி செலுத்த வேண்டும்’ என மாநகராட்சி அறிவித்துள்ளது. சிலர் நிலுவை வைத்து சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்தியுள்ளனர். அவர்களது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், “”அனைத்து வரிவிதிப்புதாரர்களும் உடனடியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவைத்தொகையை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, வர்த்தக நிறுவனங்களுக்கு “சீல்’ போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். வார்டு எண் 5 ல் முதல் அரையாண்டு சொத்துவரி 31,000 நிலுவை வைத்துள்ள நபரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 6ல் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்துள்ள அப்பார்ட்மென்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது போன்று 10க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் துண்டிப்பு பணி தொடரும்,” என்றார்.