வளர்ச்சித் திட்டப்பணிகள்: குடிநீர் வழங்கல் துறை செயலர் கே.பனீந்தரரெட்டி ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை செயலருமான கே.பனீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவில் டயாலிஸிஸ் இயந்திரங்கள் மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் (நியோ நாட்டல் ஐ.சி.யூ) இன்குபேட்டர் கருவியின் செயல்பாடு, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக அரசு மருத்துவ மனையின் தரைப்பகுதிகளை தொடர்ந்து சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், எளம்பலூர் ஊராட்சியில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2011 – 12ம் ஆண்டில் கட்டப்பட்ட வீடுகளை பார்வையிட்ட அவர், ரூ. 31 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டப்பணிகளுக்காக நெடுவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். வாலிகண்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு கருவிகளின் பயன்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சரஸ்வதி, கோட்டாட்சியர் இரா.ரேவதி, நகராட்சி தலைவர் சி.ரமேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) ப.சங்கரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.