தினகரன் 30.06.2010
வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் கீழக்கரை நகர் பகுதியில் போக்குவரத்து காவல்நிலையம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கீழக்கரை, ஜூன் 30: கீழக் கரையில் போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர்அகமது தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் சுந்தரம் முன்னிலை வகித்தார்.
கீழக்கரை நகராட்சியில் உள்ள 110 தெருக்களை சுத்தம் செய்ய 31துப்புரவு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆடவர் சுயஉதவி குழு மூலம் 15பேர்களுக்கு நாள் கூலியாக ரூ.100வழங்கி துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஒப்பந்த ஊதியத்தை அதிகப்படுத்த கோரியதின் பேரில் மாதம் ரூ.4ஆயிரத்து 500 வழங்கப்படும்.
கீழக்கரை நகராட்சி பகுதியில் வாகனங்கள் அதிகமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க கீழக்கரையில் போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க வேண்டும்.
நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள மயானத்தில் எரிவாயு தகனமேடை நவீனமுறையில் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய பஸ்ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள நவீன கட்டண கழிப்பறையில் குளியலறைக்கு ரூ.3, கழிவறைக்கு ரூ.2, சிறுநீர் கழிக்க ரூ.1கட்டணம் வசூலிக்கலாம். 12வது நிதிக்குழு மானியத்தில், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் பழைய கூட்ட அரங்கில் நவீன கணினி மையம் ரூ.3லட்சத்தில் அமைக்கப்படும்.
நுகர்வோர் புகாரின் பேரில், 2 மீன்மார்க்கெட்டிலும், டிஜிட்டல் தராசு பயன்படுத்த அறிவுறுத்துவது, மேலும் சிமென்ட், ஜல்லி, செங்கல் கடைகளை ஊருக்கு வெளியே அப்புறப்படுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3வது வார்டில் 21சுனாமி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் ரூ.60ஆயிரத்திலும், பொதுக்குழாய்கள் ரூ.48ஆயிரத்திலும் அமைக்கப்பட உள்ளது என்று தலைவர் பஷீர்அகமது தெரிவித்தார்.