தினகரன் 31.05.2010
வாக்காளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை
பெங்களூர், மே 31: பெருநகர் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதியில் 100 சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையை 100 சதவீதம் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இதுவரை 64 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதம் உள்ள 36 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உள்ளோம். இதற்கான பணி ஜூன் 1ம் தேதி (நாளை) முதல் தொடங்கி மாத இறுதி வரை நடக்கிறது. இது வரை அடையாள அட்டை பெறாதவர்களை நேரில் சந்தித்து அட்டைக்கான விண்ணப்ப படிவத்தை சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடு வீடாக வழங்குவார்கள்.
ஜூன் முதல் தேதியில் இருந்து 10ம் தேதி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். பின்னர் அதனை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் வீடு தேடி வரும்போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு நிரந்தரமான அடையாள அட்டையாகும். ஓட்டு போடும் உரிமைக்கு மட்டும் அல்லாமல் இதர பயன்பாட்டுக்கும் இது பயன்படும். எனவே வாக்காளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.