வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை மாநகராட்சி வார்டு அலுவலகங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விவரம்: சென்னை மாநகர மக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த முறையை எளிமைப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் 200 வார்டுகளில் அமைந்துள்ள வார்டு அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவேடுகளில் திருத்தம் மற்றும் பெயர் சேர்ப்பது தொடர்பான விஷயங்களுக்கு மண்டல அலுவலகம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. திருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களை பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை அணுகலாம் என திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.