தினகரன் 23.11.2010
விக்ரோலி லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்ட அரசு உத்தரவு
மும்பை
, நவ. 23: விக்ரோலி ரயில்வே லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்டுமாறு ரயில்வே மற்றும் மாநகராட்சிக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.விக்ரோலி லெவல் கிராசிங்கில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்துகளில்
3 பேர் புறநகர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். இந்த விபத்துகளை தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் பயணிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 2 மணி நேரம் மத்திய ரயில்வேயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்ரோலி ரயில் நிலையத்தையொட்டி இருக்கும் லெவல் கிராசிங்கை பொதுமக்கள் கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல பயன்படுத்து கின்றனர்.ஏற்கனவே இருக்கும் ரயில்வே நடைபாலத்தை பயணிகளை தவிர பொதுமக்கள் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுத்துவந்ததால் பொதுமக்கள் லெவல் கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது
. இதன் காரணமாக இந்த லெவல் கிராசிங்கில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. இவ்விபத்துகளில் பலர் பலியான போதும், மேம்பாலம் கட்ட இதுவரை ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆத்திரத்தில்தான் நேற்று முன்தினம் பயணிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், நேற்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சகன் புஜ்பால் மற்றும் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர், ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினர். அப் போது விக்ரோலி லெவல் கிராசிங்கில் உடனடியாக நடைமேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.“
விக்ரோலி லெவல் கிராசிங்கில் நடைமேம்பாலம் கட்டும் பணி ஜனவரி 15ம் தேதி துவங்கும். பாலம் கட்ட உடனடியாக அனுமதி அளிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அமைச்சர்கள் சகன் புஜ்பால், ஆர்.ஆர்.பாட்டீல் கூறினர். இது குறித்து மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி முட்கரிகர் கூறுகையில், “விக்ரோலியில் லெவல் கிராசிங் இருக்கும் இடத்தில் புதிய நடைமேம்பாலம் ஒன்று பொதுமக்கள் தேவைக்காக உடனே கட்டப்படும். இதற்கு இரண்டு வாரத்தில் ரயில்வே ஒப்புதல் வழங்கும். அடுத்த வாரம் நடைமேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்படும். கட்டுமானப்பணிகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும்” என்றார்.புதிய பாலம் கட்டும் வரை தற்போது இருக்கும் ரயில்வே நடைமேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
. மேலும் விக்ரோலி லெவல் கிராசிங் அருகில் ரயில்களின் வேகத்தை சற்று குறைக்கும் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இந்த லெவல் கிராசிங்கை கடந்து சென்று 325 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.