மாலை மலர் 23.11.2010
விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் தாக்கல்: சி.எம்.டி.ஏ.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, நவ.23- சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி. ஏ.வுக்கும்), மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டியல் தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் ஒருவாரம் காலஅவகாசம் கொடுத்தனர்.
அத்துடன் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் சேர்த்து தாக்கல் செய்யும்படி சி.எம். டி.ஏ.வுக்கு உத்தரவிட்டனர்.