தினமணி 4.11.2009
விழுப்புரம்: மாநகராட்சியாக மாற வாய்ப்பு
விழுப்புரம், நவ. 3: விழுப்புரம் நகராட்சியுடன் கூடுதல் ஊராட்சிகள் இணைக்கப்படும் போது அது மாநாகராட்சியாக மாற வாய்ப்பு உள்ளது என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் அவர் பேசியது:
கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள காகுப்பம், பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி ஆகிய ஊராட்சிகளை விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூடுதல் ஊராட்சிகள் விழுப்புரம் நகராட்சியுடன் சேர்க்கப்படுவதால் வருங்காலத்தில் விழுப்புரம் மாநகராட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இதேபோல, திண்டிவனம் நகராட்சியுடன் நிர்வாக வசதிக்காக சலவாதி, மானூர், ஜக்காம்பேட்டை ஆகிய ஊராட்சிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களிலும் நிர்வாக வசதிக்காக சில ஊராட்சிகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த மாற்றம் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளும், சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் வரும்படி அமைக்கப்படும்.
இதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியும்.
இந்த ஊராட்சி ஒன்றியங்களின் எல்லை மறுசீரமைப்புக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தலைமை வகித்தார்.
மக்களவை உறுப்பினர் ஆதி. சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா. உதயசூரியன், திருநாவுக்கரசு, அங்கையற்கண்ணி, செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவி வசுந்தராதேவி, துணைத் தலைவர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.