தினமணி 26.02.2010
வீட்டில் இருந்தபடி ரத்தப் பரிசோதனை
சென்னை, பிப். 25: வீட்டில் இருந்தபடியே மிகக் குறைந்த கட்டணத்தில் அனைத்து வகையான ரத்தப் பரிசோதனைகளையும் செய்துகொள்ளும் திட்டம் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், மேயர் மா. சுப்பிரமணியன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வீட்டில் இருந்தபடி 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், மாநகராட்சி லேப் டெக்னிஷியன்கள் வீட்டுக்கே வந்து ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்று, முடிவுகளை தெரிவிப்பர்.
கட்டணம்? ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிய ரூ. 15}ம், சிறு நீரகத்தின் செயல் திறன் அறிய ரூ. 20}ம், சர்க்கரை ஏற்ற சோதனைக்கு ரூ. 60}ம், கொழுப்பு சத்து அளவை அறிய ரூ. 20}ம் கட்டணம் வசூலிக்கப்படும்.
ரூ. 750}க்கு முழு உடல் பரிசோதனை: இதுமட்டும் அல்லாமல் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பகுப்பாய்வுக் கூடங்களில் ரூ. 750}க்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோல் இ.சி.ஜி. பார்க்க ரூ. 40}ம், அல்ட்ரா சவுண்ட் சோதனைக்கு ரூ. 150}ம், எக்ஸ்ரே எடுக்க ரூ. 50}ம் கட்டணம்.
“”சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலர், அதுகுறித்த பரிசோதனை செய்து கொள்வதற்கே நேரம் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளனர். இவர்களின் குறையை போக்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது” என்று மேயர் தெரிவித்தார்.